நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற ஒரேயொரு தேசியப் பட்டியல் ஆசனத்துக்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பில் ஆராய்வதற்கு அந்தக் கட்சியின் அரசியல் குழு வவுனியாவில் இன்று காலை 9.30 மணிக்கு கூடவுள்ளது.
இந்தக் கூட்டத்திலேயே தேசியப் பட்டியலை யாருக்கு வழங்குவது என்று தீர்மானிக்கப்படவுள்ளது.
தேசியப் பட்டியலை தனக்கு வழங்குமாறு அந்தக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராசாவும், அந்தக் கட்சியின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.பி.நடராஜூம், கட்சியின் பதில் பொதுச் செயலர் ப.சத்தியலிங்கத்திடம் எழுத்துமூலம் கோரியுள்ளனர்.
இதேவேளை தேசியப் பட்டியல் ஆசனத்தில், தேர்தலில் தோல்வியடைந்த ப.சத்தியலிங்கமும் குறிவைத்திருக்கின்றார் எனத் தெரியவருகின்றது. அதைவிட கட்சியின் சார்பில் தேசியப் பட்டியலுக்கு பெயர் குறிப்பிடப்பட்ட குலநாயகமும் இலக்கு வைத்துள்ளார் என அறியமுடிகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனோ, இவர்களில் எவரையும் நியமிப்பதை எதிர்க்கும் மனநிலையில் இருப்பதால் தேசியப் பட்டியல் தொடர்பில் இன்றைய தினம் இறுதி முடிவு எடுக்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.