நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள் தொடர்பில் நடந்து கொள்ளும் முறையால் வடக்கில் பணியாற்றுவதற்கு மருத்துவர்கள் அச்சப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் சாவகச்சேரி ஆதார மருத்துவமனை தொடர்பான கலந்துரையாடல் அண்மையில் இடம்பெற்றுள்ளது. இந்தக் கலந்துரையாடலில் சாவகச்சேரி மருத்துவமனைக்கான மருத்துவர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை, சாவகச்சேரி அபிவிருத்திச் சங்கம் மற்றும் நோயாளர் நலன்புரி சங்கம் என்பவற்றால் முன்வைக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது.
இதன்போது வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன், சாவகச்சேரி மருத்துவமனை தொடர்பில் ஒருவர் செய்த போராட்டம் பின்னர் மன்னாரில் இடம்பெற்ற போராட்டம் என்பன காரணமாக வடக்கு மாகாணத்துக்கு வருவதற்கு மருத்துவர்கள் பின்னடிக்கும் நிலைமை காணப்படுவதாகத் தெரிவித்தார். அத்துடன் கடல்கடந்த தீவுப்பகுதி ஒன்றில் பணியாற்றும் பெண் மருத்துவர்களை தான் சந்தித்தபோது, அருச்சுனா இந்த மருத்துவமனைக்கு வந்தால் தாங்கள் கடலால் ஓடித் தப்புவதா என்று கேள்வி எழுப்பியதாகவும் அவர் இதன்போது அபிவிருத்திச் சங்க மற்றும் நோயாளர் நலன்புரி சங்க பிரதிநிதிகளிடம் கூறியுள்ளார்.
தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களே வடக்கு மாகாணத்துக்கு மருத்துவர்களாக நியமனம் பெற்றுவரும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனாவின் செயற்பாடு காரணமாக அவர்கள் இங்கு வரப்பின்னடிப்பதால் சகல மருத்துவமனைகளிலும் நெருக்கடி நிலைமை தோன்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.