காற்றுச் சுழற்சி காரணமாக இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு எதிர்வரும் நாள்களில் கடும் மழை கிடைக்கப்பெறாது என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள பதிவில்,
தொடர்ந்தும் மேற்கு வடமேற்காக நகர்ந்திருக்கும் காற்று சுழற்சியானது மேலும் தீவிரமடைய முடியாமல் தெற்கு மத்திய வங்கக்கடலில் இலங்கைக்கு தென்கிழக்காக நீடிக்கிறது.
வட இந்திய வறண்ட காற்றின் வருகை, சராசரி கடல்வெப்பம், வடக்கு இந்து சமுத்திரத்தில் நிலவும் ஏனைய தாழ்வு நிலைகளால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள வெப்ப நீராவிக்காற்று, குளிர்ந்த கடல் நீரோட்டங்கள் போன்ற எதிர்மறையான புறக்காரணிகளின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் இக்காற்று சுழற்சி தீவிரம் பெறுவதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.
அடுத்த இரண்டு நாட்களில் இது மேலும் சாதாரண காற்று சுழற்சியாகவே இதே திசையில் நகர்ந்து, சற்று வலுவிழந்து, இலங்கையின் வடக்கு மாகாணத்தை ஊடறுத்துக்கொண்டு அரபிக்கடலில் செயலிழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் இந்த மாதம் 11ஆம், 12ஆம் திகதிகளில் வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் சாதாரண மழையுடன் கூடிய குழப்பமான வானிலை நிலவுவதோடு கிழக்கு மாகாணத்தில் பெரும்பாலும் தூறல் அல்லது மேகமூட்டமான வானிலை காணப்படலாம் என்றும் எதிர்வுகூறப்படுகிறது எனப் பதிவிடப்பட்டுள்ளது.
கடந்த காலங்களிலும் வானிலை தொடர்பில் துல்லியமாக பதிவுகளை சமூக ஊடகத்தில் மேற்கொண்டுவரும் செந்தில் குமரன் என்ற இளைஞனே இவ்வாறு பதிவிட்டுள்ளார்.