இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் ஆசனம், கட்சியின் பொதுச் செயலர் ப.சத்தியலிங்கத்துக்கு வழங்கப்படவுள்ளதாக அறியமுடிகின்றது.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வன்னித் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டிருந்த சத்தியலிங்கம் 5ஆவது இடத்தைப் பெற்றிருந்தார். இந்த நிலையில் தேசியப் பட்டியல் ஆசனத்தை அவருக்கு வழங்குவதற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் விரும்பியிருந்ததாகத் தெரியவருகின்றது.
வவுனியாவில் இன்று நடைபெற்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தில் இது தொடர்பில் வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றுள்ளன. இறுதியில் ப.சத்தியலிங்கத்துக்கு வழங்குவதற்கான இணக்கம் எட்டபட்டுள்ளதாக அறியமுடிகின்றது. இருப்பினும் இது இன்னமும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இதேவேளை, கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராசாவும் தேசியப் பட்டியல் ஆசனத்துக்காக கடுமையான தர்க்கங்களை முன்வைத்துள்ளார் என்றும் அறியமுடிகின்றது.
கட்சியின் பொதுச் செயலர் ப.சத்தியலிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் சொல்கேட்டு அவரது விருப்பத்துக்கு இணங்க செயற்படுபவர் என பல தரப்பினரது குற்றச்சாட்டுக்களையும் எதிர்கொண்ட ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.