மன்னாரில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியால் வழங்குவதற்கு என கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகுதி உலர் உணவு பொருட்கள் நேற்று மாலை மன்னார் – யாழ் பிரதான வீதியில் வைத்து அடம்பன் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபர்கள் மூவர் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மன்னார் – யாழ் பிரதான வீதியில் வாகனம் ஒன்றை மறித்து சோதனை செய்தபோது வாகனத்தில் ஒரு தொகுதி உலர் உணவு பொருட்கள் காணப்பட்டன.
அவை தொடர்பில் பொலிஸார் முன்னெடுத்த விசாரணையில், உலர் உணவுப் பொருட்கள் வாக்காளர்களுக்கு விநியோகிக்க அரசியல் கட்சி ஒன்றால் கொண்டு செல்லப்பட்டமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து வாகனத்தின் சாரதி, உதவியாளர் உள்ளிட்ட வாகனத்தில் பயணித்த மூவரும் சந்தேகத்தில் கைதாகியுள்ளனர்.
290 நபர்களுக்கு வழங்கக்கூடிய வகையில் தயார் செய்யப்பட்ட 5 கிலோ அரிசிப் பொதி, 2 கிலோ மா பொதி, 1 கிலோ சீனி பொதி, 20 கிராம் ரிங்சோ 5 வீதம் தயார் செய்யப்பட்ட பொதியே பொலிஸாரிடம் சிக்கியுள்ளது.
இந்தப் பொருட்களின் பெறுமதி 6 லட்சத்து 13 ஆயிரத்து 500 ரூபா என்று தெரியவந்துள்ளது.