நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, தேர்தலுக்கு முன்பாக தமது கட்சியின் தேசியப் பட்டியலை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முறைப்படி ஒப்படைக்கவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது. இந்தத் தகவலை தேர்தல்கள் ஆணைக்குழுவும் உறுதிப்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இம்முறை தனித்துப் போட்டியிட்டது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் அனைத்து தேர்தல் மாவட்டங்களிலும் போட்டியிட்ட அந்தக் கட்சி 7 ஆசனங்களை நேரடியாகவும் தேசியப் பட்டியல் மூலமாக ஓர் ஆசனத்தையும் பெற்றுக் கொண்டது.
அந்தக் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல் ஆசனத்துக்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பில் தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழு வவுனியாவில் கூடி ஆராய்ந்தது.
அந்தக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராசா தேசியப் பட்டியல் ஆசனத்தை தனக்கு வழங்குமாறு கோரியபோதும், வயது மூப்பானவர்களுக்கு வழங்குவது பொருத்தமில்லை என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.
வன்னித் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு 5ஆவது இடத்தை விருப்பு வாக்கில் பெற்றுக்கொண்ட பதில் செயலர் ப.சத்தியலிங்கத்துக்கு தேசியப் பட்டியல் ஆசனத்தை வழங்க இறுதியில் தீர்மானிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் தேசியப் பட்டியல் ஆசனத்துக்குரியவர்களை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தேர்தலுக்கு முன்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு ஒப்படைக்காமல் விட்ட விடயம் வெளிச்சத்துக்கு வந்தது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர், ஒவ்வொரு கட்சியும் தேசியப் பட்டியலுக்குரிய 29 பேரின் பெயர்களை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு ஒப்படைக்கவேண்டும். அந்தக் கட்சிக்கு கிடைக்கும் தேசியப் பட்டியல் ஆசனத்துக்கு, மேற்படி பட்டியலில் இருந்து அல்லது அந்தக் கட்சி சார்பில் ஏதாவது ஒரு தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஒருவரை நியமிக்க முடியும்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தேர்தலுக்கு முன்னர், தமது கட்சி சார்பில் தேசியப் பட்டியலுக்குரிய 29 பேரின் பெயர்கள் அடங்கிய பட்டியலை தயாரித்து அதை இம்முறை வழமைக்கு மாறாக தேர்தல்கள் திணைக்களத்துக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைத்துள்ளது.
அந்தப் பட்டியல் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு நேரடியாக கையளிக்கப்பட வேண்டிய ஆவணமாகும். இதுவரை காலமும் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் அதைச் சரிவர செய்து வந்த அந்தக் கட்சி இம்முறை மாத்திரம் அதனை மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைத்துள்ளது. இதன் காரணமாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு கிடைத்த தேசியப் பட்டியல் ஆசனத்துக்கு, அந்தக் கட்சியின் சார்பில் ஏதாவது ஒரு தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஒருவரையே நியமிக்க முடியும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட வேண்டும் என்பதற்காகவே, திட்டமிட்டு கட்சியின் பதில் பொதுச் செயலர் ப.சத்தியலிங்கம், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு பட்டியலை மின்னஞ்சலில் அனுப்பியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த விடயம் நேற்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டபோது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் அறிவுறுத்தலுக்க அமைவாகவே அவ்வாறு செய்ததாக பதில் பொதுச் செயலர் ப.சத்தியலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலில் தோல்வியடைந்த ஒருவருக்கு தேசியப் பட்டியல் ஆசனத்தை வழங்குவதற்காக முன்னெடுத்த இந்த கபட நடவடிக்கை கட்சி உறுப்பினர்களிடையே, குறிப்பாக கட்சிக்குள் இருக்கும் சிறீதரனின் ஆதரவாளர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.